புற்றில்வாழ் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே
வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே
கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணாராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான் தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தனின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே
1 comment:
ஐயா அடங்கா தமிழன்
இன்று தான் உங்கள் வலைப்பூ பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
இனி தொடருகிறேன்
Post a Comment